சென்னை மாநகராட்சியில், பல கோடி ரூபாய்க்கு பணிகளை முடித்துவிட்டு, பணம் பட்டுவாடாவிற்காக காத்திருக்கும் ஒப்பந்ததாரர்கள், தீபாவளி பண்டிகைக்கு முன் கொஞ்சமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நிதி இல்லாததால், நிலுவை தொகையை வழங்கவும் முடியாமல், ஒப்பந்ததாரர்களுக்கு பதிலும் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மாநகராட்சியில் ஓராண்டாக நிதிச்சுமை இருந்தாலும், சட்டசபை தேர்தலுக்கு பின் முடித்த பணிகளுக்கு, இதுவரை எந்த பட்டுவாடாவும் செய்யப்படவில்லை. தேர்தலுக்கு பின், வங்கிகளில் கூடுதல் பற்று, சொத்துவரி வருவாய், அரசு நிதி ஆகியவற்றில் குறிப்பிட்ட தொகை, மாநகராட்சிக்கு கிடைத்தது.
ஆனால், இந்த தொகை, தேர்தலுக்கு முன் பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ரூ.300 கோடிக்கு மேல் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு இந்த தொகை பிரித்து வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஒப்பந்ததாரரும், வர வேண்டிய தொகையில், குறிப்பிட்ட சதவீதமாவது தர வேண்டும் என, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அதிகாரிகளும் சளைக்காமல் மாதக்கணக்கில் பதில் சொல்லிக் கொண்டே வருகின்றனர். அந்த பதில் “இன்று போய் நாளை வா” என்ற கதையாகவே உள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனை, ஒப்பந்ததாரர்கள் குழுவாக சென்று சந்தித்தனர். தீபாவளி பண்டிகைக்கு முன், குறிப்பிட்ட சதவீதம் தொகையை வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் ஒப்பந்ததாரர்களும், அவர்களை சார்ந்துள்ள நுாற்றுக்கணக்கான குடும்பங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, சென்னை மாநகராட்சியில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் நிதிச்சுமை இருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் எல்லா பிரச்சனைகளும் சீராகும் என்றும் கமிஷனர் கூறியதாக தெரிகிறது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன், அதிக நிலுவை, பணி முடித்த தேதி முன்னுரிமை அடிப்படையில், பட்டுவாடா நிச்சயம் நடக்கும் என்றும் கமிஷனர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஒப்பந்ததாரர்கள் கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால், தற்போது மாநகராட்சியின் இருப்பில் உள்ள சில கோடியை, ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்க திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
