கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் அதன் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்று அடங்கியுள்ளது. இதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி என்னும் நிலை ஏற்பட்டது. அதன்படி உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகளை தயார் செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தடுப்பூசி போடாதவர்களால் தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என பல மாநில அரசுகள் அறிவித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டாய தடுப்பூசி உத்தரவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டத்திற்கு எதிரானது எனக்கூடி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களுக்கு அதிகம் கொரோனா பரவிவிடக் கூடாது என்ற காரணத்துக்காகவே கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது.

தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பொதுமக்களுக்கு கட்டாயமாக்கலாம் என்று தமிழக அரசின் 1939 ஆம் ஆண்டு சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 76 (2) (b) பிரிவில் அம்சம் உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசு கூறியதையடுத்து தமிழகத்தில் 100 சதவிகிதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு எடுத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால் தான் கொரோனா உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதாக நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.