Asianet News TamilAsianet News Tamil

அதிரடி உத்தரவில் பின்வாங்கிய மின்சாரவாரியம் .. நடந்தது இதுதான்..!

கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. மின்சாரவாரியத்தில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறி விளக்கம் அளித்துள்ளது.
 

Corona Vaccine Awareness
Author
Madurai, First Published Dec 2, 2021, 9:20 PM IST

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 125 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தாலும் புதிய வகை வைரஸ் ஓமிக்ரான் 24 நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. எனவே இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் தடுப்பூசி போட முன்வருவதில்லை என்பதால் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தடுப்பூசி போடாத ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்து வைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று மதுரையில் காலை வெளியிடப்பட்டது.

மதுரை மண்டல மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26.11.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் மதுரை மண்டல அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையினை 07.12.2021 சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது என்ற உத்தரவை திரும்பி பெற்றுக் கொள்வதாக சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மதுரை மண்டல மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் உமாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளம் நிறுத்தம் செய்யப்படும் என நாங்கள் முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளோம். மேலும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் சம்பளம் கிடையாது என்ற உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டது ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios