கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தோர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, கந்திக்குப்பம் அருகே இன்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, கந்திகுப்பம் அருகே சாலையேரம் நின்றிருந்தவர்கள் மீது அந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் மேம்பாலம் அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சாலை மறியலில் சுமார் 500 பேர் ஈடுபட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய காருக்கு பொதுமக்கள் தீவைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் குறித்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் களைந்து செல்லும்படி போலீசார் கூறினர்.

ஆனால், அடிக்கடி விபத்து நிகழ்வதால் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி, அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சீராகி வருகிறது. போலீசாரின் தடியடிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.