விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மரியம்மாள். இந்த தம்பதியருக்கு தமிழ் ரோஜா, சரஸ்வதி இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தமிழ் ரோஜா பொறியியல் படித்துள்ளார். இளைய மகள் சரஸ்வதி இவர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மருத்துவம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

சென்னை கமாண்டோ போலீஸ் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திவேல் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். கார்த்திகேயன், கமாண்டோ பயிற்சி பெற்று 15-வது பட்டாலியனில் இருந்து வந்தார். தமிழக பாதுகாப்பு பிரிவில் ஓ.டி.யாக இருந்து வந்தார்.

 மருத்துவ கல்லூரியில் பயிலும் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நண்பர்களிடமும், ஊரில் உள்ளவர்களிடம் கார்த்திவேல் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சரஸ்வதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சரஸ்வதி குறித்து கல்லூரியில் விசாரித்தபோது, உடன் பயிலும் மாணவருடன் பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், செல்போனிலும், சரஸ்வதி பேசாமலேயே இருந்துள்ளார். 

அக்டோபர் 10 ஆம் தேதி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால், தான் ஊருக்கு செல்வதாக கார்த்திவேலுக்கு சரஸ்வதி தகவல் தெரிவித்தார். இதனைத் தொடடர்ந்து நேற்று இரவு கார்த்திவேல், சென்னையில் இருந்து பைக்கில் அன்னியூர் வந்தார். இரவு 12 மணியளவில், தான் வாங்கி வந்த கேட்கை வெட்டினார் கார்த்திவேல். அப்போது தன்னுடன் பேசாமல் இருப்பது பற்றி சரஸ்வதியிடம் கேள்வி கேட்டுள்ளார். வேறு மாணவர் ஒருவருடன் சரஸ்வதி பேசுவது குறித்தும் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் கார்த்திவேல். சந்தேகப் பிரச்சனையால், கார்த்திக்வேலிடம் இருந்து சில காலம் சரஸ்வதி ஒதுங்கியிருந்ததாக இன்று காலை செய்திகள் வெளியான நிலையில், காதலனை கைவிட்டு மற்றொரு வாலிபனை காதலித்ததால் இந்த கொலையும், தற்கொலையும் நிகழ்ந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.