Continuous protests will happen if the new pension scheme is not canceled - jacto jio warns
மதுரை
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என்று ஜாக்டோ-ஜியோ, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் தலைமைத் தாங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட சில ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர் வழக்குகளும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளைத் திரும்ப பெறாவிட்டால், அதை எதிர்த்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் டிசம்பர் 21-ஆம் தேதி வழக்கு தொடரப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் அரசு ரத்து செய்யாவிட்டால், ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜனவரி நான்காவது வாரம் முதல் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
