Asianet News TamilAsianet News Tamil

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் இரயில் மறியல் போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு...

continues Rail Strike Struggle to emphasis Setup Cauvery Management Board - Marxist Communist Party of India
continues Rail Strike Struggle to emphasis Setup Cauvery Management Board - Marxist Communist Party of India
Author
First Published Mar 16, 2018, 10:40 AM IST


திருவாரூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தொடர் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக, எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. கர்நாடக மாநிலத் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. 

அப்படியே நிர்ப்பந்தத்தின் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தாலும் அது பெயரளவுக்கே இருக்கும். 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 

இந்த தீர்மானத்தை மட்டுமே நம்பி இருந்துவிடாமல், அதிக அதிகாரம் கொண்ட ஆணையம் அமைக்க வற்புறுத்தி, மீண்டும் அனைத்துக் கட்சிகள் கூடி வலிமையானப் போராட்டங்கள் நடத்த வேண்டும். 

தேவைப்பட்டால் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராடுவது போன்ற வலிமையானப் போராட்டங்களை கொண்டு தமிழக உரிமையை மீட்டெடுக்க முடியும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்ரல் 1 முதல் 4-ஆம் தேதி  வரை பிரச்சார இயக்கமும்,  அதனைத் தொடர்ந்து  ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் இரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும்"  என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios