Asianet News TamilAsianet News Tamil

குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள்; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Consultation with officials at Chief Secretariat of Chief Minister Stalin regarding fixing drinking water requirement vel
Author
First Published Apr 27, 2024, 3:50 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பேசியதாவது, கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

வெப்ப அலை பிரச்சினை குறித்து இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில்,  தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும்,  மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச் சூழல் குறித்து, தலைமைச் செயலாளர் அவர்களும்,  பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள். 

கோவை மக்களவை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது; சர்கார் விஜய் பாணியில் நீதிமன்றத்தில் திடீர் வழக்கு

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்க கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். 

தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய்  குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும்  மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். 

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து,  தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் போது,  அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். 

இரவில் கள்ளக்காதலனுடன் வீடியோ கால்; மனைவியின் கையை துண்டித்த கணவன் - வேலூரில் பரபரப்பு

இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம்.  எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். 

ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும், இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

நமது மாநிலத்தில் வாக்குப் பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில்,  இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். 

நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால்,  அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios