Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்படவில்லை.

Congress candidate list released for 7 constituencies in Tamil Nadu sgb
Author
First Published Mar 23, 2024, 10:59 PM IST

காங்கிரஸ் கட்சியின் நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே புதுச்சேரி வேட்பாளராக வைத்தியலிங்கம் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 9 பேருக்கு வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்தப் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர் ஆகியோருக்கு அவர்கள் ஏற்கெனவே எம்.பி.யாக இருக்கும் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில் விஷ்ணுபிரசாத் மற்றறும் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர். சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரி தொகுதிக்கு கோபிநாத், விருதுநகர் தொகுதிக்கு மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆரணி தொகுதி எம்.பியாக இருக்கும் விஷ்ணுபிரசாத்துக்கு கடலூரில் மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. திருவள்ளூர் (தனி) தொகுதியில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சிக்குள் கடுமையான போட்டி காணப்பட்டது. கடைசியில் தேர்தல் வார் ரூம் பொறுப்பாளரான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியிலும் புதுமுகமான கோபிநாத்துக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் பெயர் தெரியவரவில்லை. நாளை இத்தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகக்கூடும் என்று சொல்லப்படுகிறது.  நெல்லையில் உள்ளூரைச் சேர்ந்த கட்சி நிர்வாகி பால்ராஜ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது எனவும் அதற்கு கட்சி மேலிடத்தில் இருந்து எதிர்ப்பு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவருக்குப் பதிலாக நெல்லையில் மூத்த காங்கிரஸ் நிர்வாகி பீட்டர் அல்ஃபோன்ஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios