காவிரி பிரச்சனை உருவாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தர். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்கு உரிய நீரை பெற்று தர வேண்டும் என்றும் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக செய்திகள் வருகின்றன. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு, அதன் பங்கை செய்யவில்லை.

தமிழக முதலமைச்சர், காவிரி உரிமை பிரச்சினையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். 17 மற்றும் 18–ஆம் தேதியும் காவிரி பிரச்சினை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள இரயில் மறியல் போராட்டங்களில், 18–ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நாம் தமிழர் கட்சி கலந்து கொள்ளும். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீருக்கு கர்நாடக அரசு சொந்தம் கொண்டாடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

இந்திய இறையாண்மையை அனைத்து மாநிலங்களும் மதித்து நடக்க வேண்டும்.

எங்கள் வளம் எங்களுக்கு என்று மற்ற மாநிலங்கள் நினைத்தால், நாமும் நமது வளத்திற்கு உரிமை கொண்டாடும் சூழ்நிலை உருவாகும்.

பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் மாநில உரிமைகளை காக்க அனைத்து கட்சிகளும் போராட வேண்டும்.

காவிரி பிரச்சினை உருவாக காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் காரணமாகும்.

கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவை தொகையை தீபாவளி பண்டிகை போன்ற பண்டிகை காலங்களில் உரிய நேரத்தில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று சீமான் தெரிவித்தார்.