தமிழக அரசு இணையதளத்திலிருந்து அமைச்சர்கள் முகவரி நீக்கப்பட்டதற்கு ஜெயக்குமாரே காரணம் என்றும் முகவரி நீக்கப்பட்டதன் மூலம் அமைச்சர்கள் தவறு செய்தது உறுதி ஆகிவிட்டதாக மக்கள் எண்ணுகிறார்கள் என்றும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக  நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆதாரம் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்று கண்டித்து வரும் அமைச்சர்களுக்கு பதில் அளிதக்கும் வகையில்  கமல்ஹாசன், “ஊழல் என்ற சத்தம் ஊரெல்லாம் கேட்கிறது. 

இதில் அமைச்சர்களுக்கு ஆதாரம் வேண்டுமாம். அமைச்சர்கள் கேட்ட ஆதாரங்களையும் ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

அமைச்சர்களை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் முகவரியையும் அதில் வெளியிட்டார்.  

அந்த முகவரிக்கு ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வைக்க ரசிகர்கள் தயாரானபோது முகவரி பற்றிய விவரங்கள் அனைத்தும் திடீரென மாயமாகி இருந்தன.

அமைச்சர்களின் தொடர்பு எண்கள், இமெயில் முகவரி, அவர்களின் சொந்த ஊர் பற்றிய முகவரி விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் போன்றவை எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, தமிழக அரசு இணையதளத்திலிருந்து அமைச்சர்கள் முகவரி நீக்கப்பட்டதற்கு ஜெயக்குமாரே காரணம் என்றும் முகவரி நீக்கப்பட்டதன் மூலம் அமைச்சர்கள் தவறு செய்தது உறுதி ஆகிவிட்டதாக மக்கள் எண்ணுகிறார்கள் என்றும்  தெரிவித்தார்.