கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை அமைத்து ஒருங்கிணைந்த பூங்காவாக மாற்றும் நடவடிக்கையை எதிர்த்து திருநெல்வேலியில் சனிக்கிழமை எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில், பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் இந்த மாநாடு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்கமாக நாகர்கோவில் முரசு கலைக் குழுவினரின் பறை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண. குறிஞ்சி தலைமை வகிக்கிறார். நாணல் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் வரவேற்புரையாற்றுகிறார். முதல் 2 அணு உலைகளின் குளறுபடிகள் எனும் தலைப்பில் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைர் சுப. உதயகுமாரன் கருத்துரையாற்றுகிறார்.

தமிழகத்தில் அணு உலைகள் விரிவாக்கம் எனும் தலைப்பில் பூவலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பேசுகிறார்.

மாற்று எரிசக்தி எனும் தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, என்எஸ்பி ஒப்பந்தம் எனும் தலைப்பில் பூவுலகு அமைப்பின் சீனிவாசன் ஆகியோர் பேசுகின்றனர்.

அணு உலை அரசியலும், ஏகாதிபத்திய நலன்களும் எனும் தலைப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உரையாற்றுகிறார்.

மாலை 5 மணிக்கு நடைபெறும் அரசியல் அரங்க நிகழ்வுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகிக்கிறார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலர் வன்னியரசு மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.