தஞ்சாவூர்

பேராவூரணி அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டுப் பகுதியில் பயணம் செய்த நடத்துநர் தவறி விழுந்த பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணிக்கு கடந்த 17-ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது. பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டுப் பகுதியில் நடத்துநர் பார்த்திபன் மற்றும் மூன்று மாணவிகள் நின்றுக் கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்து கறம்பக்காடு என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது படிக்கட்டுப் பகுதியில் நின்றிருந்த நடத்துநர் பார்த்திபன் மற்றும் மூன்று மாணவிகள் தவறி கீழே விழுந்தனர்.  

இதில் மாணவிகள் நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. நால்வரும் கீழே விழுந்ததைப் பார்த்த சகபயணிகள் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடத்துநர் பார்த்திபன் (25) நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பேராவூரணி காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.