மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!
மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர்.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
From The India Gate : எதிர்க்கட்சி தலைவர் போட்டியில் குழம்பும் பாஜக.. கரைசேருமா கர்நாடகா காங்கிரஸ்
கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, நமது நாட்டையும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.