மதுரை

மதுரையில் உள்ள கீழமாத்தூர் கிராமத்தில் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட காரணமான தனியார் குடிநீர் விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், கீழமாத்தூர் கிராமத்தினர் வெற்றுக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கீழமாத்தூரில்  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தனியார் குடிநீர் விற்பனை நிறுவனம், பல ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளது. 

இதன்மூலம் நாள்தோறும் பல இலட்சம் லிட்டர் நீரை இராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுத்து வருகிறது. 

வணிக நோக்கில் நிலத்தடி நீரை பெருமளவில் எடுத்து வருவதால் இப்பகுதியின் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் ஆதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதே நிலை தொடர்ந்தால் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, தனியார் குடிநீர் விற்பனையையும், இராட்சத மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.