Comedy actor kidnapped jewelry cash are taken away
திரைப்பட காமெடி நடிகரை ஆட்டோவில் கடத்தி தர்மஅடி கொடுத்து நகை, பணத்தை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை போரூரை சேர்ந்தவர் கொட்டாச்சி. பிரபல காமெடி நடிகர். தற்போது இவர், வயக்காட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடந்தது.
நேற்று இவருக்கு பிறந்த நாள். அதை சென்னையில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை செல்ல முடிவு செய்தார். இதற்காக திருப்பூரில் இருந்து சேலத்திற்கு நேற்று அதிகாலை 1.45க்கு பஸ்சில் வந்து இறங்கினார்.
பஸ் நிலையத்தின் வெளியே தனியார் சொகுசு பஸ்கள் நிற்கும் இடத்துக்கு நடந்து சென்றார். அப்போது, பஸ் நிலையத்தின் நுழைவாயிலில், நின்றிருந்த ஒரு ஆட்டோ டிரைவர், கொட்டாச்சியிடம், தனியார் பஸ் நிற்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதற்கு ரூ.30 கட்டணமும் கேட்டுள்ளார்.
இதையடுத்து நடிகர் கொட்டாச்சி ஆட்டோவில் ஏறினார். அதே ஆட்டோவில் மேலும் 2 பேர் ஏறினர். அங்கிருந்து புறப்பட்ட ஆட்டோ சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டிக்கு சென்றது. இதனால், சந்தேகமடைந்த கொட்டாச்சி ஆட்டோ எங்கே போகிறது என கேட்டுள்ளார். உடனே ஆட்டோவில் இருந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர், அவரது செல்போன், அணிந்திருந்த 2 சவரன் நகை, கையில் இருந்த ரூ.2500, ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்டு சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். ஆள் நடமாட்டமில்லாததால் அங்கேயே கொட்டாச்சி ரோட்டில் காத்திருந்தார்.
3 மணிக்கு பின்னர் போக்குவரத்து நடமாட்டம் ஏற்பட்டதும் அவ்வழியாக வந்த 4 பேரிடம் தன்னை அறிமுகப்படுத்தி அவர், நடந்த விவரத்தை கூறி, சேலத்தில் வசிக்கும் மற்றொரு காமெடி நடிகர் பெஞ்சமினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து கொட்டாச்சியை அஸ்தம்பட்டிக்கு அழைத்து சென்று பெஞ்சமினிடம் சேர்த்தனர்.
இதுகுறித்து நேற்று மதியம் சூரமங்கலம் போலீசில், கொட்டாச்சி புகார் செய்தார்.. புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவரை கடத்தி சென்றது ஆட்டோ டிரைவர்கள் என தெரிந்தது. இதை தொடர்ந்து, மர்மநபாக்ளை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னதாக நடிகர் கொட்டாச்சி, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றார். சம்பவம் நடந்தது நரசோதிப்பட்டி என்பதால் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுக்குமாறு அனுப்பினர். சூரமங்கலம் காவல் நிலையம் சென்றபோது, கடத்தப்பட்ட இடம் புதிய பஸ் நிலையம் என்பதால் பள்ளப்பட்டியில் கொடுக்கும்படி தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட தன்னிடம் புகார் வாங்கு மறுத்து போலீசார், அலைக்கழிப்பது பற்றி நடிகர் கொட்டாச்சி, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். உயர் அதிகாரிகள் கடிந்து கொண்டதையடுத்து சூரமங்கலம் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
