வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, தமிழக - ஆந்திர மாநில எல்லையில் பரதராமி கிராமம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் இராமசாமி (60), விவசாயி. பத்து ஆண்டுகளுக்கு முன் இவர் மனைவி மங்கம்மாள் இறந்து விட்டார். ஒரே மகன் சரவணன் (45). திருமணமாகி, ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார்.

இராமசாமி மட்டும் தனியாக பரதராமியில் வசித்து வருகிறார். இராமசாமி தம்பி ஏழுமலையின் மகன் முனியாண்டி (40) அடிக்கடி, இராமசாமியின் வீட்டுக்குச் சென்று தேவையான உதவிகள் செய்து வந்தார்.

தான் இறந்து விட்டால், தனக்கு கொள்ளி போடுபவருக்கே, தனது இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என, ஊர் பஞ்சாயத்தில் இராமசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் இராமசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.

சித்தூரில் உள்ள அவரது மகன் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். மாலை, 4:00 மணி வரை சரவணன் வராததால், முனியாண்டியைக் கொண்டு கொள்ளி போட பஞ்சாயத்தில் முடிவெடுத்தனர்.

இதனால், இராமசாமியின் உடலை ஊர்வலமாக அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

முனியாண்டி கொள்ளி போடும் சமயத்தில் அங்கு வந்த சரவணன், அதை தடுத்து தகராறு செய்தார். இதனால் வாக்கு வாதம் முற்றியது. இராமசாமியின் பிணத்தை எரிக்காமல், அவரது வீட்டுக்கே திரும்பவும் எடுத்துச் செல்லும்படி பஞ்சாயத்தார் கூறினர்.

இதனால் இராமசாமியின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இராமசாமியின் வீட்டில், இரவு, 10:00 மணிக்கு ஊர் பஞ்சாயத்து நடந்தது. அதில், தன் தந்தைக்கு கொள்ளி போட தாமதமாக வந்ததை சரவணன் ஒத்துக்கொண்டு, பஞ்சாயத்தாரிடம் மன்னிப்பு கேட்டார்.

இதனால் சரவணனுக்கு பஞ்சாயத்தார், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின், ராமசாமிக்கு கொள்ளி போட ஒத்துக் கொண்ட முனியாண்டிக்கு, அரை ஏக்கர் நிலம் கொடுப்பது என்றும், மீதமுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை சரவணன் எடுத்துக் கொள்வது என்றும் பஞ்சாயத்தில் முடிவு செய்தனர்.

அதை சரவணணும், முனியாண்டியும் ஏற்றுக் கொண்டனர். இதனால் திங்கள் கிழமை காலை, 7:00 மணிக்கு, இராமசாமியின் உடலை மீண்டும் ஊர்வலமாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு சரவணன் கொள்ளி வைத்தார்.