கன்னியாகுமரி 

கன்னியாகுமரியில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்  தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 

இந்தத் தேர்தலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கூட்டுறவு சங்கத்திற்கு  ஆறு பொது,  மூன்று பெண், எஸ்.சி மற்றும் எஸ்.டி. வகுப்பினைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம்  11 பேர் கொண்ட நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட வேண்டும். 

அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களை இந்தத் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்றபோதிலும்  அரசியில் கட்சிகள் தனி அணியாகவும், கூட்டணி அமைத்தும் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுவதைக் காண முடிகிறது. 

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் குலசேகரம் மற்றும் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடும் போட்டி நிலவுகிறது. 

குலசேகரத்தில் இரண்டு அணிகளும், பேச்சிப்பாறையில் மூன்று அணிகளும் களத்தில் உள்ளன. இவர்கள் கடந்த மூன்று நாள்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.