Asianet News TamilAsianet News Tamil

கூட்டுறவு வங்கியில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ரெய்டு - கூடா நட்பால் வந்த வினை

co operative-society-search
Author
First Published Dec 24, 2016, 8:23 AM IST


கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகத்தில்று அமலாக்கபிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முக்கிய பிரமுகர்களின் கருப்பு பணத்தை மாற்ற தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் உதவியதாக வந்த புகார்கள் அடிப்படையில் சேலம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். 

அந்த வரிசையில் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு நேற்று காலை மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 3 பேர் ஆய்வை தொடங்கினர். முதற்கட்டமாக அவர்கள் வங்கியின் பண பரிவர்த்தனை பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.  

நவம்பர் 10ம் தேதி முதல் 14ம்தேதி வரையில் 5 நாட்களில் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளை வங்கிகள் மற்றும் சிதம்பரம், விருத்தாசலம் நகர வங்கிகளில் டெபாசிட் பெறப்பட்ட ரூ.51 கோடிக்கான கணக்குகளையும் அதில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

இதில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலில் சந்தேகத்துக்கு உரியவர்கள் 13 பேரை நேரில் வரவழைத்து அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அவர்கள் கூறிய விளக்கங்களை எழுத்து மூலம் பெற்றனர். லாக்கரில் சாக்கு பைகளில் ரூ.30 கோடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பழைய ஐநூறு மற்றும் ஆயிரம்

ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சரிபார்த்தனர். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் சந்திரசேகரன் அறையில் உதவி பொதுமேலாளர் ஜெயசங்கரிடம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளின் பண பரிவர்த்தனை பதிவேடுகள் மற்றும் அவை குறித்த கணினி பதிவுகளை பெற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

புதிய வங்கி  கணக்கு தொடங்கி அதன் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பட்டியல், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் அதிக அளவில் டெபாசிட் செய்தவர்கள் பட்டியல் ஆகியவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்து குறிப்பெடுத்து சென்றுள்ளனர். 

இரவு 7.30 மணிக்கு சோதனை முடிவடைந்தது.சோதனைக்கு பின்னர் வெளியில் வந்த அதிகாரிகளிடம் முறைகேடுகள் குறித்து கேட்டபோது பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றனர். கடலூர் மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கியில் 8 மணி நேரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ரெய்டு காரணமாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் அதில் பொறுப்பு வகிக்கும் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

சேகர் ரெட்டியின் கருப்பு பணத்தை மாற்ற கூட்டுறவு வங்கிகள் உதவி?

வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவின் விசாரணை வளையத்தில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் அடுத்தடுத்து சிக்கியுள்ளதன் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் கோடிக்கணக்கில் செல்லாத நோட்டுகள் மாற்றப்பட்டன.

புதிதாக தொடங்கப்பட்ட கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும், மத்திய கூட்டுறவு வங்கிகள் பழைய நோட்டுக்களை பெற ரிசர்வ் வங்கி கடந்த நவம்பர் 15 ம்தேதி தடை விதித்தது. மணல் குவாரி கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி சிக்கியபோது அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் புதிய ₹2000 நோட்டுகள் பறிமுதலானது. 

விசாரணையில் சேகர் ரெட்டியின் கருப்பு பணம் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடந்து வருகிறது. கும்பகோணம், சேலத்தை தொடர்ந்து இப்போது கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியும் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளது. 

கூட்டுறவு வங்கியின் முதன்மை பொறுப்பில் உள்ளவர்தான் இதெற்கெல்லாம் காரணம் என்றும் கூறப்படுகிறது. முக்கிய அமைச்சருக்கு நெருக்கமாக இருந்த அவர், சேகர் ரெட்டியிடமும் நெருங்கிய நட்பை வளர்த்து வந்துள்ளார். சேகர் ரெட்டியின் கருப்பு பணம் கூட்டுறவு வங்கிகள் மூலம் மாற்றப்பட்டதன் பின்னணி இந்த நட்புதான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios