தஞ்சை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதில் பல கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் என்ற பெயரில் போலியாக பெறப்பட்ட கடன்களும் தள்ளுபடி ஆனதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை அருகே மணக்கரம்பை கூட்டுறவு சங்கத்திலும் போலி ஆவணங்கள் மூலம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
தஞ்சை அருகே அரசூரை சேர்ந்த சில விவசாயிகள் பெயரில் போலியாக கடன் பெற்று அரசின் தள்ளுபடி அட்டவணையில் இடம் பெற்றுள்ளது விவசாயிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு இணைப்பதிவாளருக்கும் புகார் சென்றது. 
இதையடுத்து இணைப்பதிவாளர் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். தற்போது, இப்புகாரில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உறுதியாகி உள்ளதாகவும், அதுகுறித்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``மணக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் கள அலுவலர் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர் அதுகுறித்து அறிக்கை அளித்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்த விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்’’ என்றார்.