Asianet News TamilAsianet News Tamil

நெருங்கும் பண்டிகைகள்… கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிருங்கள்… மக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

cm stalin statement regarding omicron restrictions
Author
Chennai, First Published Dec 24, 2021, 8:15 PM IST

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

cm stalin statement regarding omicron restrictions

இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களான உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் மனோஜ் முர்ஹேக்கர், துணை இயக்குநர் மருத்துவர் பிரதீப் கவுர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜே.வி. பீட்டர், உலக சுகாதார மையத்தின் தென் மண்டலக் குழுத் தலைவர் மருத்துவர் கே.என்.அருண்குமார், இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற நகர சுகாதார அலுவலர் மருத்துவர் பி.குகானந்தம், அப்போலோ மருத்துவனையின் தொற்றுநோய் வல்லுநர் மருத்துவர் வி. இராமசுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினர். மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

cm stalin statement regarding omicron restrictions

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும். கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios