Asianet News TamilAsianet News Tamil

உங்க கூட்டணி தலைவர்கள் மூலம் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீரை பெற்று தாங்க முதல்வரே! TTV.தினகரன்

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் பெறாமல், தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்திருக்கும் திமுக அரசு.

CM Stalin should take necessary steps to get Cauvery water on time.. TTV Dhinakaran tvk
Author
First Published Jun 9, 2024, 11:15 AM IST | Last Updated Jun 9, 2024, 11:20 AM IST

மேட்டூர் அணையின் நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இதுவரை எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்யாமல் அலட்சியம் காட்டும் திமுக அரசுக்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழலால் கேள்விக்குறியாகியிருக்கும் டெல்டா பகுதி குறுவை சாகுபடி. – சிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

இதையும் படிங்க: இனியும் அலட்சியம் வேண்டாம்! தமிழக இளைஞர்களை ஆன்லைன் அரக்கனிடம் இருந்து காப்பாத்துங்கள்.. டிடிவி.தினகரன்!

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடந்த ஆண்டும் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டிலும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது என்ற செய்தி டெல்டா பகுதி விவசாயிகளின் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கை பேரிடர்கள், பொய்த்துப்போன பருவமழை, அதள பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் என சவால்கள் நிறைந்த சூழலிலும் விவசாயத்தை கைவிடாத விவசாயிகளுக்கு, விதை நெல், உரங்கள், இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கும் வகையில் சிறப்பு குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் பெறாமல், தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்திருக்கும் திமுக அரசு, மேட்டூர் அணையின் நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இதுவரை எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்யாமல் அலட்சியம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிங்க:  60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி நடக்குது! அப்படினா மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது! TTV!

எனவே, ஊருக்கே உணவளிக்கும் உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரத்துடன் கூடிய சிறப்பு குறுவைத் தொகுப்புத்திட்டத்தை உடனடியாக அறிவிப்பதோடு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் மூலம் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios