தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு புத்தாடைகள் மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு புத்தாடைகள், பழ வகைகள் மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்து சமய அறநிலையத்துறையானது திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையிலும் பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சிப் பள்ளிகள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், கருணை இல்லங்கள் நடத்தப்பட்டு வருவதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய 2,800 இணைகளுக்கும், 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் கட்டணமில்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

2025-2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “திருக்கோயில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் திருக்கோயில்கள் சார்பில் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக திருக்கோயில்கள் சார்பில் 20,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்திடும் வகையில் சென்னை, வேப்பேரி, பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து, தொடங்கி வைத்தார். இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இவ்விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் தவத்திரு சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தவத்திரு அப்பன் உலகாரிய இராமனுஜ எம்பார் சுவாமிகள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.