MK Stalin Condemns Dharmendra Pradhan: தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதி மறுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்காக நாடாளுமன்ற மக்களவை 24 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பிரதமர் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இந்த நிதியை பெற்றுள்ளன. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மாநிலங்களை பழிவாங்க பள்ளி மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சரியா? மத்திய அரசின் இந்த செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு அரசு முதலில் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. மிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்களுக்கு தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்களின் ஒரே வேலை மொழி பிரச்சினையை உருவாக்குவதுதான். அவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஜனநாயக விரோதிகள், அநாகரிகமானவர்கள் எனவும் விமர்சித்திருந்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
