Asianet News TamilAsianet News Tamil

சற்று முன்.. ! அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..

அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாள் என கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.மேலும் சமத்துவ நாள் உறுதிமொழி தமிழகம் முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.  
 

CM Stalin Announcement In Assembly
Author
Tamilnádu, First Published Apr 13, 2022, 12:23 PM IST

ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ அம்பேத்கரின் வெண்கல சிலை நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 
 
இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அண்ணல்‌ அம்பேத்கர்‌ வடக்கில்‌ உதித்த சமத்துவ சூரியன்‌; பலர்‌ வாழ்வில்‌ கிழக்காய்‌ இருந்த பகலவன்‌; சமூகம்‌ ஏற்படுத்திய ஏற்றத்‌ தாழ்வை, கல்வி, சட்டம்‌, அரசியல்‌ எழுச்சி மூலமாக சமப்படுத்திய போராளி; “இருட்டறையில்‌ இருக்குதடா உலகம்‌; சாதி இருக்கிறதென்போனும்‌ இருக்கின்றானே” என்ற புரட்சிக்‌ கவிஞர்‌ பாரதிதாசனுடைய வரிகளைப்போல, சாதிக்‌ கொடுமையால்‌ இருண்ட உலகத்தைத்‌ தன்னுடைய பரந்த அறிவால்‌, ஞானத்தால்‌ விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல்‌ அம்பேத்கர்‌ என்று புகழாரம் சூட்டினார்.

மேலும்  வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதைச்‌ சேர்த்த ஓவியர்‌; அண்ணல்‌ அறிவுச்சுடராய்‌ விளங்கி அரசியலமைப்புச்‌ சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர்‌. அவருடைய கருத்துக்கள்‌ ஆழமும்‌, விரிவும்‌ கொண்டவை; எதிர்காலத்திற்கு ஒளிவிளக்கு அது என்று புகழ்ந்தார். இதனிடையே ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌ துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும்‌ கண்காணிப்புக்‌ குழுக்‌ கூட்டம்‌ நேற்று நடைபெற்றது.  அந்தக்‌ கூட்டத்தில்‌ பெரியார்‌ பிறந்தநாளை “சமூகந்தி நாளாக‌ அறிவித்தது போல, அண்ணல்‌ அம்பேத்கர்‌ பிறந்த நாளான ஏப்ரல்‌ 14 ஆம்‌ தேதியை “சமத்துவ நாள்‌” என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.  இந்தக்‌ கோரிக்கையை ஏற்று, ஏப்ரல்‌ 14 ஆம்‌ தேதி இனி சமத்துவ நாளாகக்‌ கொண்டாடப்படும்‌ என்றும்‌,  சமத்துவ நாள்‌ உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும்‌ எடுத்துக்கொள்ளப்படும்‌ என்றும்‌ மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத்‌ தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக முதலமைச்சர் அறிவித்தார். 

நேற்றைய கூட்டத்தில்‌ அண்ணல்‌ அம்பேத்கர்‌ மணிமண்டபத்தில்‌, அண்ணலுடைய முழு அளவு வெண்கலச்‌ சிலையை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையை விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சியினுடைய தலைவரும்‌, நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர்‌ தொல்‌. திருமாவளவன்‌ முன்வைத்தார்கள்‌. அந்தக்‌ கோரிக்கையையும்‌ ஏற்று, அண்ணல்‌ அம்பேத்கர்‌ மணிமண்டபத்தில்‌ முழுஉருவ வெண்கலச்‌ சிலை நிறுவப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைச்‌ சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும்‌, முன்னாள்‌ மத்திய அமைச்சருமான ராசா ‌, பெரியாருடைய
நூல்களை 21 மொழிகளில்‌ மொழி பெயர்த்ததைப்‌ பாராட்டியதோடு, அண்ணல்‌ அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைத்‌ தமிழில்‌ வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்துப்‌ புதுப்பிக்க வேண்டும்‌ என்ற ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்‌. அந்தக்‌ கோரிக்கையும்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால்‌ அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்‌ செம்பதிப்பாக தமிழில்‌
வெளியிடப்படும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்வதாக கூறினார்.

சமூகநீதியின்‌ நோக்கம்‌ சமத்துவத்தை அடைவதே என்பதையும்‌, இவ்விரண்டும்‌ நம்‌ இலக்கின்‌ இரண்டு கண்கள்‌ என்பதையும்‌ இந்த மாமன்றம்‌ மட்டுமல்ல; இந்தியத்‌ துணைக்‌ கண்டமே அறியும்‌. தமிழர்கள்‌ அனைவரும்‌ உயர்ந்த நிலையை அடைய, எத்தகைய விண்ணப்பம்‌ வந்தாலும்‌, அதை உடனே பரிசீலித்து ஆவன செய்கிற ஆட்சிதான்‌ இப்போது நடக்கிறது என்பதைத்‌ தெரிவித்து, இந்தளவில்‌ இந்த அறிவிப்பை நிறைவு செய்து அமைகிறேன்‌ என்று முதலமைச்சர் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios