பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், டி.பி.ஐ. வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, நூற்றாண்டு நினைவு வளைவினைத் திறந்து வைத்தார்.
முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளருமான க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
மேடையில் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏ; நிர்வாகிகள் அதிர்ச்சி
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையினை திறந்து வைத்தார்.
மேலும், பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் முதல்வர் திறந்து வைத்தார். பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் பெயர் பலகை ஆகியவை 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.