திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட தூய்மை காவலர்கள் மாயமானதால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தூய்மை பாரத திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு தமிழகத்தில் 2,000 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில், 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து வந்தனர்.
பின்னர், அவற்றை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும், பாலிதீன் கழிவுகளை விற்பனைக்கும் பயன்படுத்தினர். இவர்களுக்கு, தினக் கூலியாக ரூ. 203 வழங்கப்பட்டு வந்தது.
இப்பணி, தேசிய வேலை உறுதித் திட்டத்தின் மூலம் 100 நாள்களுக்கும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் 200 நாள்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 150 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, துôய்மைக் காவலர் பணி சுழற்சி முறையில், நூறு நாள்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பல ஊராட்சிகளில் பணியாட்கள் கிடைக்கவில்லை.
மேலும் துப்புரவுப் பணி என்றவுடன் பலர் மாயமாகியுள்ளனர். இதனால், இத்திட்டம் தற்போது முடங்கியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தூய்மை பாரத திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரி செய்து மீண்டும் இத்திட்டத்தை சீராக நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
