வீட்டை சுற்றியுள்ள இடங்களில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் ரக கொசுக்கள் உருவாகும் சூழலை உண்டாக்கும் இடம்,  கட்டிடம் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரகத்திடம் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், நகராட்சி ஆணையர்களுக்கும், பேரூராட்சி நிர்வாகிகளுக்கும் முறைப்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மேற்கொள்ளும் துப்புறவு பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் மீது இந்திய குற்றவியல் பிரிவு 269ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் வளரும்சூழலை அறிந்திருந்தும் அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், கவனக்குறைவாக இருப்பவர்கள், அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சுதாகாரமற்ற சூழலை உருவாக்குபவர்கள், அதன் மூலம் கொசுக்களை வளர துணையாக இருப்பவர்கள் மீது அபராதமோ அல்லது சிறைதண்டனையோ விதிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தை சாமி கூறுகையில், “ கடந்த 1960களில் சின்னம்மை, தட்டம்மை நோயை பரப்பும் சூழலை உருவாக துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 3 மாதங்களாக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஏராளமானவர்களுக்கும், கட்டிட உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

நோட்டீஸ் பெற்றவர்கள் அனைவரும், கொசுக்கள் வளர ஏதுவான சூழலை உண்டாக்கும் சுகாதாரமற்ற சூழலை வைத்திருந்தனர்.

இது தொடர்பாக நாங்கள் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். சுதாகாரமற்ற சூழல் வீடுகளுக்கு அருகே நிலவினால், அது குறித்து வீட்டு உரிமையாளர்களுக்கு தெரிவித்து எச்சரிக்கை செய்கிறோம். அவர்கள் கவனத்தில கொள்ளாவிட்டால், நோட்டீஸ் வழங்கப்படும்” என்றார்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6ஆயிரத்து 919 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர், 15 பேர் இறந்துள்ளனர். 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் செந்தில்நாதன் கூறுகையில், “ கடந்த ஜூலை மாதம் வரை சுகாதாரமில்லாமல் இடங்களை பராமரித்த நபர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலித்துள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமல்லால் சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்ைகக்கு ஒத்துழைப்பு தாராத நபர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு, அவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.