cinema director ameer condemned

சினிமாவில் கந்து வட்டி பிரச்சனை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் சினிமாவில்தான் வீர வசனம் பேசுகிறார்கள்; பாதிப்பு குறித்து யார் வெளியே சொல்கிறார்கள்? என்றும் இயக்குநர் அமீர் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகனான அசோக்குமார், மதுரையைச் சேர்ந்தவர். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியு, இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அசோக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அவர் ஆட்களை வைத்து மிரட்டுகிறார். மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அசோக்குமார், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள். பாதிப்பு குறித்து யார் வெளியே சொல்கிறார்கள். பைனான்சியர் அன்புசெழியன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்த பிரச்சனையில் அனைத்து சங்கங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திரையுலகை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இதற்கு தயாரிப்பாளர் சங்கமும் விநியோகஸ்தர்கள் சங்கமும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் அமீர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.