அண்ணாமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீதான நீதிமன்ற சம்மனுக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக சேலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மனுஷ் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், “இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனர்களின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரப்பட்டிருந்தது.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்? இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை!
இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அண்ணாமலை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்ததோடு, மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனுவில், நீதிமன்ற சம்மனுக்கும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபான்கர் தத்தா அமர்வில் பிப்ரவரி 26ஆம் தேதி (இன்று) விசாரணைக்கு வர உள்ளது.