திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  

செய்தியாளர் மீது தாக்குதல்

பல்லடம் அருகே காவல்துறையினரின் மெத்தனப்போக்கால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக போலீசாரிடம் செய்தியாளர் பாதுகாப்பு கேட்டு பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், திரு நேச பிரபு அவர்கள் நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். 

காவல் அதிகாரி மாற்றம்

ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் திரு நேச பிரபு அவர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள திரு நேசப் பிரபு அவர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

என்ன சுத்து போட்டுட்டாங்க சார்.! என்னோட லைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்! வைரலாகும் பகீர் ஆடியோ.!