காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
Paddy procurement price for farmers : காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5.22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 138.52 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது.குறுவை பாசனம் நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி தண்ணீரும். கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 7.51 டி.எம்.சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று காலை வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கனஅடியாக உயர்த்தப்படும். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின கலந்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருப்பது டெல்டா மாவட்டங்கள் என்றால், அதற்கு உயிர்நாடி காவிரி நீர்தான்!
அந்த காவிரி நீரை தேக்கி 16 மாவட்டங்களை செழிக்க வைக்கக்கூடிய மேட்டூர் அணையை கடந்த 4 ஆண்டுகளாக குறித்த தேதியில் திறந்து வைத்து விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்த மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் வந்திருக்கிறேன். அணையிலிருந்து, பொங்கி வரும் காவிரி போல உங்களையெல்லாம் பார்க்கின்றபோது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த மகிழ்ச்சியை குறிப்பாக உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், தொடக்கத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
நெல் கொள்முதல் விலை உயர்வு
விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு இனி 2500 ரூபாய் பெறுவார்கள். அதற்கேற்றாற் போல் சாதாரண ரகத்திற்கு 131 ரூபாய் எனவும், சன்ன ரகத்திற்கு இனி 156 ரூபாய் எனவும், இனி நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இதனால், சாதாரண ரகம் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சன்ன ரகம் 2 ஆயிரத்து 545 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள். சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவது அறிவிப்பு - சேலம் மாநகராட்சி பகுதிகளில், 100 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்பாடு, போதிய கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
சேலம் மக்களுக்கு திட்டங்களை அள்ளிக்கொடுத்த முதலமைச்சர்
இரண்டாவது அறிவிப்பு - சேலம் மாநகராட்சி செவ்வாய்ப்பேட்டையில் இருக்கும் தினசரி சந்தை 9 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மூன்றாவது அறிவிப்பு - தலைவாசல் வட்டத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இலுப்பநத்தம் கிராமத்தில் இருக்கும் வேளாண் விற்பனை நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். நான்காவது அறிவிப்பு - மேட்டூர் மற்றும் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். ஐந்தாவது அறிவிப்பு - சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். ஆறாவது அறிவிப்பு - தாரமங்கலம் நகராட்சியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இடைப்பாடி நகராட்சியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆத்தூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
