தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தங்க தமிழ்செல்வனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்  நோட்டீஸ் அனுப்பினார்.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் 2 வாரத்தில் பதிலளிக்க தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.  

முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த  வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தகுதி நீக்கம் செல்லும்' என்றும் நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செல்லாது' என்றும், தீர்ப்பு வழங்கினர். 

இந்த தீர்ப்பு குறித்து தினகரன் ஆதரவாளரான, முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் விமர்சனம் செய்தார். குறிப்பாக, தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சித்தார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூன், 20-ல், வழக்கறிஞர் சூர்யபிரகாசம், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, கடிதம் அனுப்பினார். இது குறித்து, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில், ஆஜராகி முறையிட்டார்.

அத்துடன், தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டி அடங்கிய குறுந்தகட்டையும், நீதிபதியிடம் வழங்கினார். அவர், தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். மேலும் அரசை விமர்சித்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நீதிபதியை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில்  தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த அறிக்கையை 25-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமை நீதிபதியை விமர்சித்ததாக தங்கதமிழ்செல்வனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்  நோட்டீஸ் அனுப்பினார்.  இந்த விவகாரம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.