திருவண்ணாமலை

மாணவர்கள் தமிழில் பிழையின்றி வாசித்தலில் 100 சதவீத இலக்கை எட்டி திருவண்ணாமலை மாவட்டம் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட 41 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுண்டகாய்பாளையம் சத்யம் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழில் பிழையின்றி எழுதுதல், படித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு தமிழ் செய்தித்தாள்களை பிழையின்றி படித்தல், தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்து பயிற்சி அளித்தனர்.

இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: "அனைத்து மாணவர்களும் தமிழ் வார்த்தைகளை பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்துகொண்டு கல்வித்தரத்தில் உயர வேண்டும். 

மாணவர்கள் தமிழில் பிழையின்றி வாசித்தலில் 100 சதவீத இலக்கை எட்டி திருவண்ணாமலை மாவட்டம் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

இந்த பயிற்சி முகாமில் சத்யம் கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி, கல்லூரி முதல்வர் மும்மது, மாவட்டக் கல்வி அலுவலர் குமார், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்