சென்னையில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சென்னையில் சிறுவன் கண் எதிரே பட்டப்பகலில் அவரது தந்தையை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சென்னை அடையார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் அடையாரில் உள்ள தனியார் பள்ளிக்கு தனது 8 வயது மகனை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை  பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்டு கும்பல், மகன் கண் எதிரே சுரேஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழக அரசோ சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.