தேனி காட்டுத்தீ விபத்து காரணமான சென்னை ட்ரெக்கிங் கிளப் மூடப்பட்டுள்ளது. அதன் வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3
குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை, பாலவாக்கத்தில் இயங்கி வந்த சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலமாக மலையேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

மலையேற்றத்துக்குப் பிறகு இவர்கள் திரும்பும்போது, காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். காட்டுத்தீயின் தாக்கத்தால், ஒன்றாக வந்தவர்கள், தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நிலையில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையேற்றம் சென்ற சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்மாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தீயில் இருந்து தப்பிக்க உயிரிழந்த 9 பேரும் அங்கிருந்த மிகப் பெரிய குழியில் குதித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மலையேற்றத்தில் சென்ற தங்கள் பிள்ளைகள், பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை கூறி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, உரிய அனுமதி பெற்ற பிறகே மலையேற்ற பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்றும், உரிய அனுமதி பெற்றிருந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர்களாகவே மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில், மலையேற்றத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக, சென்னையில் உள்ள மலையேற்ற பயிற்சி கிளப் மூடப்பட்டது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் என்பவர், சென்னை பாலவாக்கத்தில் மலையேற்ற கிளப் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில், தன்னார்வலர்களான நிஷா, திவ்யா என்ற 2 பேர் தலைமையில் குரங்கணி மலைக்கு 27 பேர் அழைத்து செல்லப்பட்டனர். 

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கென சிறப்பாக இந்த மலையேற்றமானது மார்ச் 10, 11 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்துது. அதன்படி, ஆன்லைன் மூலம் புக் செய்யப்பட்டு 27 பேர் மலையேற்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நேற்று மலையேற்றம் முடிந்து கீழே திரும்பி கொண்டிருந்தபோதுதான் அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, சென்னை, பாலவாக்கத்தில் இயங்கி வந்த சென்னை ட்ரெக்கிங் கிளப் மூடப்பட்டுள்ளது. வாசலில் இருந்த நிறுவனத்தின் பெயர்பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன.