chennai student death issue head master arrest

சென்னையில் தனியார் பள்ளியில் வழங்கப்பட்ட தண்டனையால் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூர் திரு.வி.க.நகரில் வசித்துவரும் முரளி என்பவரின் மகன் நரேந்திரன். அப்பகுதியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை 5 நிமிடம் பள்ளிக்கு தாமதமாக சென்றதால், கைகளை பின்னால் கட்டிக்கொண்டு மண்டியிட்டு மைதானத்தை மூன்று முறை சுற்றிவருமாறு உடற்கல்வி ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார்.

மண்டியிட்டு மைதானத்தை மூன்று முறை சுற்றிய நரேந்திரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர் பள்ளியையும் திரு.வி.க.நகர் காவல்நிலையத்தையும் முற்றுகையிட்டனர். 

உயிரிழந்த நரேந்திரனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், பள்ளியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், நரேந்திரனுக்கு தண்டனை அளிக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங்கை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் அருள்சாமியையும் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது.