சென்னையில் மீண்டும் போராட்டத்தில் களமிறங்கிய தூய்மை பணியாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கியதால் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. ஆகவே தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கைது

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறி, வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இதன்பிறகு தொடர்ந்து போராடிய தூய்மை பணியாளர்களை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

தலைமை செயலகம் முற்றுகை

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் இன்று திடீரென சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தலைமை செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு

ஆனால் அதையும் மீறி உள்ளே சென்ற தூய்மை பணியாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிரடியாக கைது

உள்ளே சட்டசபேரவை கூட்டம் நடந்ததால் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதன்பின்பு காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர்.