சென்னை நகரத்தில் நவம்பர் மாதம் 23 நாட்கள் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரத்தில் நவம்பர் மாதம் 23 நாட்கள் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் கனமழை பெய்தது. மேலும் அடுத்து நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் மக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். இந்த நிலையில் சென்னை நகரத்தில் நவம்பர் மாதம் 23 நாட்கள் மழை பெய்துள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால், கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வந்தது. 200 ஆண்டுகளில் 4வது முறையாக நவம்பர் மாதம் சென்னையில் 1,000 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இன்னமும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாத காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிகக்ப்பட்டுள்ளது. தற்போது மழை சற்று குறைந்திருக்கிறது. இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள ஜவாத் புயல் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நவம்பர் மாதம் சென்னை நகரத்தில் 23 நாட்கள் மழை பதிவாகியிருப்பதாகவும் இது மிகவும் அதிகமான, மேலும் மிகவும் அரிதான நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியையும் அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஒரு மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே மழை பெய்யாமல் இருந்துள்ளது என்றும் 23 மூன்று நாட்கள் மழை பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தான் சென்னை இந்த அளவுவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நீரியல் வல்லுனர்கள் கூறியிருப்பதாக குறிப்பிட்ட அவர், மேலும், சென்னை மக்கள் சூரியனை அபூர்வமாகத்தான் பார்த்துள்ளனர் என்றும் நவம்பர் மாதத்தில் அதிக நாட்கள் சென்னை மக்கள் சூரியனை பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சூரியன் தென்பட்ட போதெல்லாம், அதை போட்டோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ஷேர் செய்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
