சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கவர்னர் தங்குவதற்கான மாளிகை,குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் அதற்காக பிரத்யேக மாளிகை, அவற்றைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியது போல் புல் வெளிகள் அமைந்துள்ளன.

மேலும் 698 புள்ளி மான்கள், 198 அரிய வகை மான்கள், குரங்குகள் போன்ற விலங்கினங்களும் உள்ளன. இந்த ரம்மியமான மாளிகையை சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் .

வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பார்வையிடலாம். www.tnrajbhavan.gov.in இணைய தளத்தில் நபர் ஒருவருக்கு 25 ரூபாய் செலுத்தி முன்பதிவு செயது கொள்ளலாம்.

பொது மக்களுக்கு பேட்டரி கார்கள் மூலம் சுற்றிப்பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விழா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது  கிண்டி மற்றும் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் அபூர்வ தாவரங் கள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ராஜ் பவனில் விரைவில் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் சிலைகள் நிறுவப்படம் என்று தெரிவித்தார். சிலைகளில் உள்ள சுவடியில் நாம் எழுதினால் அதன் குரல் வடிவம் நமக்கு கேட்கும் வகையில் சிலைகள் அமைக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

நாட்டிலேயே, குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதி மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையை மட்டுமே பொதுமக்கள் பார்வையிட முடியும்.அந்த வரிசையில் தமிழக ஆளுநர் மாளிகையும் இணைந்துள்ளது.

பார்வையாளர்கள் வரும் போது ராஜ்பவன் அனுமதி சீட்டு, அசல் அடையாள சான்று எடுத்து வரவேண்டும். பார்வையாளர்கள் பேட்டரி யால் இயங்கும் கார் மூலம், புல்வெளி பகுதி, மான்கள் உலவும் பகுதி, தர்பார் அரங்கம், மூலிகை வனம் உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.