சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக நேற்று திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தின் ஊத்துக்கோட்டை ஜூரோபாயிண்ட்டுக்கு ஒருவாரத்தில் வந்துசேரும் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி, ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை தமிழகத்துக்கு தர வேண்டிய 8 டிஎம்சி நீரைத் தரவில்லை. ஆந்திர மாநிலத்தில் பற்றாக்குறை நிலவுவதால், திறக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அக்டோபர் மாதம் 2 டிஎம்சி மட்டும் திறப்பதாகத் தெரிவித்தனர். 

கடந்த 15 நாட்களுக்குமுன், கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கும்படி ஆந்திர அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது.  இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் சிறீசைலம் அணை நிரம்பியது. இந்த அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால், அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கண்டலேறு அணையில் 9.16 டிஎம்சி நீர் இருப்பு தற்போது உள்ளது.

இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து நேற்று மாலை கிருஷ்ணாநிதிநீர் கால்வாய்மூலமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காளஹஸ்திக்கு வந்ததுடம் திருப்பதிக்கு குடிநீர் தேவைக்காக திருப்பப்படும். பின் நீர்வரத்தின் அளவைப் பொருத்து சென்னை குடிநீ்ர் ேதவைக்காக கிருஷ்ணா கால்வாயில் இருந்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அடுத்த 7 நாட்களில் தமிழகத்தின் எல்லையான ஊத்துக்கோட்டை ஜுரோபாயிண்ட் பகுதியை வந்து சேரும். நீர் திறக்கப்படும் அளவும் 1,500 கனஅடியாக உயரும். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகியவற்றின் மொத்த நீர் கொள்ளவு 11.2 டிஎம்சி. ஆனால், சனிக்கிழமை நிலவரப்படி இதில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து வரும் நீரின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும். அடுத்து தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை வரை இந்த நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.