சென்னை புழல் அருகே 35 மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு 35 மூட்டைகளில் புழல் ஏரிக்கு அருகே வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்புநீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

 

பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. அப்போது ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக பொதுமக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். ஆனால் சிலர் வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர். 

இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று மூட்டை மூட்டையாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீசார், 35 மூட்டைகளையும் பறிமுதல் செய்து பிரித்து பார்த்தபோது, மூட்டையில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.