chennai lawyer arrested for smuggled 2 crores

சென்னையில் ரூ. 1.95 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சூளைமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த இரண்டு பேர் திடீரென இறங்கி தப்பித்து சென்றனர். இதையறிந்த போலீசார் காரில் சோதனை செய்தபோது ரூ.1.95 கோடி பழைய நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரின் உரிமையாளரான வழக்கறிஞர் சிவக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து சிவக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய பணம் வங்கி அதிகாரிகள் மூலம் பெறப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.