சென்னையில், ரயில்வே ஊழியர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தென்னக ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், கத்தியைக் காட்டி வழிப்பறி செய்ய முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை, முகப்பேர் கிழக்கு, சீதக்காதி பிரதான சாலையில் அடகுக்கடை நடத்தி வருபவர் மங்கல்சந்த். இவரது மகன் தேவிலால். மங்கல் சந்த் கடையில் இருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் அடகு வைக்க வேண்டும் கூறியுள்ளார். 

அடகு நகை குறித்து மங்கல் சந்த் விசாரித்துள்ளார். அப்போது, திடீரென கத்தியை எடுத்து அந்த இளைஞர், மங்கல் சந்தின் கழுத்தில் வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மங்கல்சந்த், அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் திருடன் திருடன் என்று மங்கல் சந்த் சத்தம் போட்டார்.

மங்கல்சந்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடை முன்பு திரண்டனர். பொதுமக்களைப் பார்த்த அந்த இளைஞர், பைக்கை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றார். 

ஆனால், அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர், ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அந்த இளைஞரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் உமர்கான் சர்மா என்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உமர்கான், தென்னக ரயில்வேயில் கிளார்க்காகப் பணிபுரிந்துள்ளா. கடந்த 8 மாதங்களாக உமர்கான் சர்மா சரிவர வேலைக்குச் செல்லவில்லையாம்.

அதனால் வறுமையில் வாடிய உமர்கான், மங்கல் சந்த்திடம் மிரட்டி பணம் பறிக்க முயன்று மாட்டிக் கொண்டார். உமர்கான் பயன்படுத்திய கத்தி, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயில்வே ஊழியர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.