PUBG Madan : பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து.! சென்னை ஐகோர்ட் உத்தரவு !!
பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,பப்ஜி மதன் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனு தாக்கல் செய்தார். ஆனால்,மனு மீது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இது மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதால் தற்போது எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி பப்ஜி மதன் மனுவை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.