சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக்‍கான நேர்முக உதவியாளர், பதிவாளருக்‍கான நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 391 பணிகளுக்‍கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் நீதிபதிக்‍கான நேர்முக உதவியாளர், பதிவாளருக்‍கான நேர்முக உதவியாளர், துணைப் பதிவாளருக்‍கான நேர்முக எழுத்தர் உள்ளிட்ட 101 பணிகளுக்‍கும், கணிணி இயக்‍குபவர், தட்டச்சர், நீதிமன்ற அலுவலர், காசாளர் மற்றும் ஒளிப்படி இயக்‍குபவர் உள்ளிட்ட பணிகளுக்‍கு காலியாக 290 பணிகளுக்‍கும் ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 45 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த தேர்வு முடிவுகள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் நீதிபதி நேர்முக உதவியாளர், பதிவாளருக்‍கான நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பணிகளுக்‍கு, வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்‍கும் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. கணினி இயக்‍குபவர், தட்டச்சர், காசாளர் உள்ளிட்ட பணிகளுக்‍கு வரும் 14 முதல் 17-ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.