பருவ மழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகளில் தற்போது நீர் இருப்பு குறைந்து வருகிறது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 329 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3,645 மி.கன அடியில், 120 மில்லியன் கன அடியும், புழல் ஏரியின் முழு கொள்ளளவான 3,300 மி.கன அடியில் 998 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியின் முழு கொள்ளளவான 881 மில்லியன் கன அடியில் 48 மில்லியன் கன அடி என மொத்தம் 1,495 மில்லியன் கன அடி நீர்இருப்பு உள்ளது.

4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி. இதில், 1,495 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரும் கடும் வெயிலினால் ஆவியாகி குறைந்து வருகிறது. 

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதேபோல், பருவமழை இல்லாததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் கோடையில் சென்னைக்கு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும்  என்றனர்.