கடந்த 8ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், கையில் இருப்பு வைத்து இருந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதையடுத்து கையில் உள்ள பணத்தை வங்கியில் மாற்றலாம், பெட்ரோல் பங்க், சுங்கச்சாவடி, மின்வாரிய அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் வரி செலுத்துவோர், செல்லாத பணத்தை கொடுக்கலாம் என அரசு அறிவித்தது.

இதைதொடர்ந்து கையில் பணம் வைத்து இருந்தும், இதுவரை வரி செலுத்தாமல் இருந்த ஏராளமானோ, தங்களது வீடு, நிலம், சொத்துக்களுக்கான வரிகளை தானே முன்வந்து செலுத்துகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இருந்து சென்னை மாநகராட்சி வரி வசூல் செய்ய சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி விடுமுறை நாளான நேற்று வரி வசூல் மையங்கள் செயல்பட்டன.

இதற்காக மொத்தம் 446 சிறப்பு வரி வசூல் முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் தொழில் வரி உள்பட பல்வேறு வரி வசூலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சென்னை மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், ஞாயிற்றுக்கிழை விடுமுறை என்ற போதிலும் சிறப்பு முகாம்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதன் மூலம் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.7.21 கோடி வரி வசூல் ஆனதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பொது மக்களுக்கு உதவும் வகையில் இன்றும் வழக்கமான பணி நேரத்தைவிட கூடுதல் நேரம் வரி வசூல் மையங்கள் செயல்படும். நடப்பு நிதி ஆண்டில் ரூ.700 கோடி சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த வரி ஏய்ப்பில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.