சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதனை மாற்றிவிட்டு விரைவில் வேறு ஒருவர் காவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் ஏ.கே.விஸ்வநாதன். அண்மைக் காலங்களில் சென்னை காவல் ஆணையர்களாக செயல்பட்டவர்களில் மிகவும் வித்தியாசமானவர் என்று பெயர் பெற்றார். பொதுமக்களால் மட்டும் அல்லாமல் சக அதிகாரிகள், காவலர்களும் கூட விஸ்வநாதன் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர். 

திருடர்களை விரட்டி பிடிக்கும் போலீசாருக்கு வெகுமதி கொடுப்பது. குற்றச் செயல்களை தடுக்கு உதவும் பொதுமக்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டுவது. நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் காவல்துறையினருக்கு மட்டும் அல்ல பத்திரிகையாளர்களுக்கும் உதவுவது என்று வித்தியாசமான அதிகாரியாக செயல்பட்டு வந்த விஸ்வநாதன் காலத்தில், சென்னை நகர் கிட்டத்தட்ட சி.சி.டி.வி கண்காணிப்பில் வந்துள்ளது என்றே சொல்லலாம். இவர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால் விஸ்வநாதனுக்கு வேறு ஒரு பெரிய பொறுப்பை கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

குட்கா சர்ச்சையில் சிக்கியுள்ள டி.ஜி.பி., ராஜேந்திரன் எந்த நேரத்திலும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விஸ்வநாதனை சில சிறப்பு உத்தரவுகள் மூலம் டி.ஜி.பி பொறுப்பை ஏற்க வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இது குறித்து கடந்த புதன்கிழமை அன்று விஸ்வநாதனை நேரில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். விரைவில் விஸ்வநாதன் சென்னை கமிஷ்னர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

இதனை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையராக டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஜாங்கிட் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.விற்கு  ஜாங்கிட் நெருக்கமானவர்கள் என்றாலும் கூட சென்னை ஆணையராக நியமிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக சில பலன்களை அடைய முடியும் என்று எடப்பாடி நம்புவதாக சொல்லப்படுகிறது.