கார் ஓட்ட பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுமி ஒருவரின் உயிரைப் பறித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் துரைவேலன். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியருக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். பவித்ரா அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் டேனி. இவரது மனைவி ப்ரீத்திக்கு நேற்று கார் ஓட்ட பயிற்சி அளித்து வருகிறார். இதேபோல் நேற்றும் ப்ரீத்தி கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மனைவிக்கு டேனி பயிற்சி அளித்து கொண்டே காரை இயக்க கூறியிருக்கிறார்.
 
கணவர் கூறியதை அடுத்து ப்ரீத்தி காரை இயக்கி உள்ளார். ஆனால், ப்ரீத்தியோ, காரை தவறுதலாக இயக்கி உள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமெடுத்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த துரைவேலன் - ஜெயந்தி தம்பதியரின் மகள் பவித்ரா மீது கார் வேகமாக மோதியது. 

பவித்ரா காரில் அடிபட்டதைப் பார்த்த அவரது பெற்றோர், அலறி அடித்து சென்று பார்த்தனர். அப்போது துடித்துக் கொண்டிருந்த பவித்ராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் பவித்ராவை பரிசோதித்த டாக்டர்கள், பவித்ரா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பவித்ரா உயிரிழப்புக் காரணமான டேனி - ப்ரீத்தி தம்பதியருக்கு சமீபத்தில்தான் திருமணமாகியுள்ளது. இந்த நிலையில்தான் மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார் டேனி. ஆனால், டேனியின் அந்த ஆசை, சிறுமி ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது.